கருக்கலைப்பின் போது பெண் மரணம்! பொள்ளாச்சி அருகே போலி பெண் டாக்டர் மகனுடன் கைது

பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர்.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த, நெகமம் மெட்டுவாவி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலித்தொழிலாளி. அவர் மனைவி வனிதாமணி வயது 37. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது; 4 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

 

இந்த நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பமடைந்தார். 5 மாத கரு வயிற்றில் இருந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து, வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியை அணுகினார். முத்துலட்சுமியும், அவரது மகன் கார்த்திக்கும், வனிதாமணி வீட்டிற்கு சென்று அவருக்கு ஊசி போட்டனர்.

 

மறுநாள் வசித்தூரில் உள்ள முத்துலட்சுமியின் ஆயுர்வேத மருத்துவமனையில், வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போடப்பட்டது. சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமானது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வனிதாமணி உயிரிழந்தார்.

 

இறந்து போன வனிதாமணி

 

இதற்கிடையே, மெட்டுவாவியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, மருத்துவர் முத்துலட்சுமி தனது மகனுடன் தலைமறைவானார். வனிதாமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான முத்துலட்சுமியை தேடிவந்தனர்.

 

சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள், முத்துலட்சுமியின் வீட்டிற்கு சென்ற போது, பூட்டி இருந்தது. வீட்டின் வெளியே ஊசி மற்றும் மருந்துகள் பாதி எரிந்த நிலையில் இருந்தன. அதை தொடர்ந்து, முத்துலட்சுமியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

முத்துலட்சுமி வீட்டை ஆய்வு செய்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள்.

 

இந்நிலையில். தலைமறைவாக இருந்த போலி டாக்டர் முத்துலட்சுமி, அவரது மகன் ஆகியோரை, தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Leave a Reply