‘தகுதி நீக்கம்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்த அதிமுக! தவிடுபொடியாக்க காத்திருக்கும் திமுக!!

Publish by: சிறப்பு செய்தியாளர் --- Photo : கோப்பு படம்


தகுதி நீக்கம் என்ற ஆயுதத்தை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை குறைத்து ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற அதிமுவின் திட்டத்திற்கு செக் வைக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

 

தமிழகத்தில், இடைத்தேர்த்ல நடந்துள்ள 18 சட்டசபை தொகுதிகள், வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 4 சட்டசபை தொகுதிகள் என, மொத்தம் 22 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள், மே 23 இல் வெளியாக உள்ளது.

 

இதில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் தான் அதிமுக ஆட்சி தொடர முடியும் என்ற நெருக்கடி, அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சாதகமான முடிவு வராவிட்டால் என்ன செய்வது என்ற சூழலில், தற்போது தகுதி நீக்கம் என்ற ஆயுதத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது.

 

இது குறித்து சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் நேற்று ஆலோசனை செய்தனர். அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு, கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என்று கூறப்படுகிறது.

 

ஆனால், அதிமுகவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட திமுக தலைவர் ஸ்டாலின் ஆயத்தமாகி வருகிறார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர, அவர் திட்டமிட்டுள்ளார்.

 

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, தோல்வி பயத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

 

ஒருவேளை, சபாநாயகர் நடுநிலைமை தவறி நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்” என்று எச்சரித்துள்ளார்.

 

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, நூலிழையில் அது வெற்றி பெற்றுவிட்டால், அதிமுக அரசு தானாக கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.