வாரணாசி சென்று மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓ.பி.எஸ்.! ரகசிய யாகம், ஆலோசனை பற்றிய புதிய தகவல்கள்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று நடந்த பா.ஜ.க. ஊர்வலத்தில், தனது மகன் ரவீந்திர நாத்துடன் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மோடி மற்றும் அமீத்ஷாவுடன் ஆலோசனையும் நடத்தினார்.

 

பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக, வாரணாசியே குலுங்கும் அளவுக்கு நேற்று நடந்த பிரம்மாண்ட பேரணியில் அவர் பங்கேற்றார்.

 

பா.ஜ.க.வின் இந்த பேரணியில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மகனும் தேனி மக்களவை தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமாருடன் கலந்து கொண்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிமுக நிர்வாகிகள் பலரையும் இது, புருவம் உயர்த்த செய்துள்ளது.

 

ஆனால், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மகனின் வெற்றிக்காக வாரணாசியில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தியுள்ள ஓ.பி.எஸ்., அத்துடன் மோடியின் பேரணியிலும் நட்புரீதியாகவும், கூட்டணி கட்சி என்ற அடிப்படையிலும் கலந்து கொண்டதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

 

சிறப்பு யாகத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

 

அதை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா ஆகியோரையும் ஓ.பி.எஸ். சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிவு ஒருவேளை அதிமுகவுக்கு பாதகமாக அமைந்தால், அப்போது ஆட்சியை தக்கவைப்பது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

எனினும், தேனியில் தனது மகனுக்காக பிரசாரம் செய்ததற்காக பிரதமர் மற்றும் அமீத்ஷாவிடம் நன்றி தெரிவிக்கவே ஓ.பி.எஸ். சந்தித்தார் என்று, வழக்கம் போல அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர், பிடி கொடுக்காமல் நழுவினர்.

 

எது எப்படியானாலும், வாரணாசிக்கு மகனுடன் சென்று பா.ஜ.க. பேரணியில் பங்கேற்றதும், அதன் தலைவர்களை ஓ.பி.எஸ். சந்தித்திருப்பதும் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மை.


Leave a Reply