பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.
பின்னர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். அதன்பின் அவர் கூறும் போது, வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.