திருப்பூர் பூத்திற்குள் அதிமுகவினர் ‘ஆனந்த’ தாண்டம்! கேள்வி கேட்ட ஏஜென்டை ‘கவனித்ததால்’ களேபரம்!!

திருப்பூரில், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் வாக்களிக்க சென்றபோது, பூத்திற்குள் அதிமுகவினர் அத்துமீறி நுழைந்ததோடு, கேள்வி கேட்ட நபரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலால் வாக்காளர்கள் பீதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்புராயன் போட்டியிடுகின்றனர்.  இன்று காலை முதலே திருப்பூரில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து சென்றனர்.
இன்று காலை 7.40 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன், தனது குடும்பத்தாருடன் பத்மாவதிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  முருகபாளையம் ஈடன் கார்டன் அரசு பள்ளி வாக்குச்சாவடிக்கு, அ.தி.மு.க வேட்பாளர் ஆனந்தன், தனது கட்சி பரிவாரங்களுடன் வந்தார்.
ஆனந்தன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்ததும் தான் தாமதம், அவருடன் வந்த கட்சிக்காரர்களும் திமுதிமுவென, அதிகாரிகள் தடுத்தும் நிற்காமல் பூத்திற்குள் சென்றனர். அப்போது வேட்பாளர்  எம்.எஸ்.எம் ஆனந்தன், தனது வலதுகையை தூக்கி இரட்டை இலை சின்னத்தை  போல் காண்பித்தார்.  இதற்கு, அங்கிருந்த இந்திய கம்யூனிஸ்ட் பூத் ஏஜென்ட் சக்திவேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனுமதியின்றி அ.தி.மு.க.வினர் பூத்திற்குள் நுழைந்தது பற்றி கேள்வி எழுப்பினர்.
உடனே ஆவேசமடைந்த அதிமுகவினரும், ஆனந்தனின் உறவினரான ராஜேஷும், சக்திவேலிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; இது முற்றி, ஒரு கட்டத்தில் கைகலப்பானது. இதனால் வாக்குச்சாவடியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்தனர். இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் அதிமுகவினரோ, கம்யூனிஸ்ட் பூத் ஏஜெண்ட் சக்திவேலை வெளியே செல்லுமாறு கூறி, இழுத்து செல்ல முயன்றனர். அப்போது  ஆனந்தனின் உறவினர் ராஜேஷ், சக்திவேலின் முதுகில் தாக்க, பிரச்சனை மேலும் தீவிரமானது. இதையெல்லாம் பார்த்து, வாக்களிக்க வரிசையில் காத்திருந்தவர்கள் பீதிக்குள்ளாகினர். அங்கு பதற்றமான சூழல் நீடித்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், இருதரப்பினர் இடையே பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த பிறகே, அங்கு அமைதி திரும்பியது.  எனினும், தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்களின் இதயத்துடிப்பு சீராக, சில நிமிடங்கள் பிடித்தன.
“ஆணையத்தில் புகார் செய்வோம்’
கம்யூனிஸ்ட் பூத் ஏஜென்ட் சக்திவேலிடம்  நாம் பேசினோம். அவர்,  வாக்குச்சாவடிக்கு சம்பந்தமே இல்லாமல், இங்கு ஓட்டுகளும் இல்லாத நிலையில் கரை வேட்டி கட்டியவர்கள்  எப்படி பூத்துக்கள் வரலாம்? ஓட்டு போட்டவுடன் வேட்பாளர்  எம்.எஸ்.எம் ஆனந்தன்  ஓட்டு இயந்திரம் முன் நின்று, எப்படி இரட்டை இலை சின்னத்தை போல் கையை  காண்பிக்கலாம்?  அவரது செயல் குறித்து, கட்சியினரிடம் ஆலோசித்துதே ர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.
மோசடி புகாருக்கு ஆளானவர் ராஜேஷ்!
எம்.எஸ்.எம். ஆனந்தன், தமிழக அறநிலத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த போது, அவரது உறவினரான ராஜேஷ் தான், உதவியாளராக இருந்து வந்தார். வேலைவாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக, ராஜேஷ் மீது புகார் வரவே, வேறுவழியின்றி அவரை ஆனந்தன் கழற்றி விட்டார்.
தற்போது அ.தி.மு.க வேட்பாளராக  எம்.எஸ்.எம் ஆனந்தன் நிறுத்தப்பட்டதும், மீண்டும் அவரிடம் வந்து ராஜேஷ் ஒட்டிக்கொண்டதோடு, அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்களில் திரும்பவும் ஈடுபடுவதாக, அதிமுகவினரே புலம்புகின்றனர்.
வேட்பாளர் பேட்டி..
இதைத்தொடர்ந்து வாக்குசாவடியை விட்டு வெளியே வந்த அ.தி.மு.க  வேட்பாளர்  எம்.எஸ்.எம் ஆனந்தன் மேலும் சலசலப்பு வராமல் இருக்க 100 மீட்டர் தள்ளி ஒரு இடத்தில நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது : இந்த தொகுதியில் அம்மா கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன். நானும் எனது குடும்பத்தினரும் ஓட்டு போட்டு வந்துள்ளோம் . திருப்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக ஜெயிப்பேன். இனிமேல் 6 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்யயுள்ளேன் என்றார். முன்னதாக அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்ரீ மாகாளிஅம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டார்.

Leave a Reply