வேலூர் தொகுதி தேர்தல் ரத்து ரத்துதான்! முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

 

மக்களவை தேர்தலில் இரண்டாவது கட்டமாக நாளை நடக்கும் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளும் அடங்கும். இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்த நிலையில் அதன் பிறகு, வேலூர் தேர்தல் ரத்து குறித்த அறிவிப்பை குடியரசு தலைவர் வெளியிட்டர். இது அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வேலூர் தொகுதிக்குட்பட்ட காட்பாடியில், திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் நடத்தும் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை சிக்கியதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தேர்தல் ரத்து என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

 

புகாருக்குள்ளான வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் வாதம்  என்று, மனுதாரரும் அதிமுக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதிகளோ, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதிநீக்க முடியும். வேட்பாளரை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

 

தேர்தலை ரத்து செய்ய வேண்டாமெனில் , பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்ததால்தான் ரத்து செய்தோம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாலையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றனர்.

 

அதன்படி மாலை 5:30 மணியளவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வேலூர் தொகுதி மக்களவை தேர்தலை ரத்து செய்த ஆணையம் முடிவில் தலையிட இயலாது என்று கூறி, அது தொடர்பான ஏ.சி. சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.


Leave a Reply