மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பா? பதவியை உதறித் தள்ளும் அமைச்சர்

தேர்தலில் போட்டியிட தனது மகனுக்கு வாய்ப்பு தந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார்.

 

மத்திய உருக்குத்துறை அமைச்சர் பிரேந்தர் சிங், ஹரியானாவை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவராக இருந்தவர். 2014ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த சூட்டோடு மத்திய அமைச்சரானார். முதலில் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது. இவர், 2016-ம் ஆண்டு ஹரியானாவில் இருந்து பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின், உருக்குத்துறை ஒதுக்கப்பட்டது.

 

தற்போதைய மக்களவை தேர்தலில் பிரேந்தர் சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங்குக்கு ஹரியானாவின் ஹிசார் தொகுதியை பா.ஜ.க. ஒதுக்கி உள்ளது. இதனால் பிரேந்தர் சிங் மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரே குடும்பத்தில் தனக்கும், தனது மகனுக்கும் பதவி கிடைப்பதன் மூலம் வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும்  என்று வருத்தப்பட்டார்.

 

இதனால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இது குறித்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு, அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

 

பிரேந்தர் சிங் கூறுகையில், பா.ஜனதாவின் கொள்கை, வாரிசு அரசியலுக்கு எதிரானது. எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருப்பதால், நான் எம்.பி. பதவியையும், மந்திரி பதவியையும் நான் ராஜினாமா செய்வதே நல்லது என்றார்.


Leave a Reply