தமிழத்தில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரசாரம் பண பட்டுவாடா தடுக்க ஆணையம் கண்காணிப்பு

தமிழகத்தில், மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 

வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள், கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக அதன் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தனர்.

 

அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து, அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்ச் மாதம் 20ஆம் தேதி  பிரசாரத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

 

உடல் நலக்குறைவால் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத தேமுதிக தலைவர் விஜயகாந்த், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ.க. தலைவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். இப்பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது.

 

இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக கண் காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply