தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்பட்ட அதன் பின்னணியில் டெல்லியில ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடைபெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னமான குக்கரை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனை எதிர்த்தே தினகரன் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். உச்சநீதிமன்றத்தில் தினகரனுக்கு காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர். ஆனாலும் கூட பதிவு செய்யப்படாத ஒரு கட்சிக்கு ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு தங்களால் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கைவிரித்து விட்டது.
ஆனாலும் கபில்சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு உள்ள தொடர்புகள் மூலம் தினகரன் கட்சிக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் அவர்களுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அது குக்கர் சின்னம் தான் என்று இல்லை என்று கூறி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இதன் அடிப்படையில் தினகரன் கட்சியின் வேட்பாளர்கள் எதிர்கால நலன் கருதி குக்கர் சின்னம் இல்லை என்றாலும் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொதுவான சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவில்லை மாறாக பரிந்துரை மட்டுமே செய்தது உச்சநீதிமன்றம். இதனால் பொதுவான ஒரு சின்னம் தினகரன் கட்சிக்கு கிடைக்காது என்றே தகவல்கள் வெளியாகின. ஆனால் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் தொடர்ச்சியாக முயன்று தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னமான gift pack வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதன் பின்னணியில் டெல்லியில் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதாக கூறுகிறார்கள். மத்தியில் அதிகாரத்திலிருக்கும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவரை கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி மற்றும் தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சந்தித்துப் பேசிய பிறகு நள்ளிரவில் பொதுவான சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
இந்த ரகசிய பேச்சுவார்த்தையின் போது தினகரன் தரப்பிலிருந்து டெல்லியில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கியமான சில வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பிறகுதான் தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாகவும் பேசுகிறார்கள்.