தேவகோட்டையில் வாலிபர் திட்டமிட்டு கொலை: பா.ஜனதா நிர்வாகி உள்பட 9 பேர் கைது

தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேவுகன். இவரது உறவினர் பிரபு (வயது 26). நேற்று இரவு நடராஜபுரம் பகுதியில் நின்றபோது 10 பேர் கும்பலால் பிரபு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் உதவி சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பா.னதா முன்னாள் நகரச் செயலாளர் ஜெயராமன் தரப்புக்கும், சேவுகன் தரப்புக்கும் முன் விரோதம் இருந்ததும், இதில் ஏற்பட்ட மோதலில் தான் கொலை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.


கொலை செய்யப்பட்ட பிரபு வெளிநாட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்தார். நாளை மறுநாள் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக பிரபுவின் தாயார் பாண்டியம்மாள் (50) போலீசில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக ஜெயராமன் (48), அவரது மனைவி பிரேமா (39), மகன்கள் பிரவீன் (27), பிரகாஷ் (25) மற்றும் காரையார் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (28), அவரது சகோதரர் முருகானந்தம் (27), நடராஜபுரம் பாபு (30), செந்தில் (29), அருணகிரி பட்டினம் சந்தோஷ் (31), முத்துச்சாமி (32) ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் பிரகாஷ் தவிர மற்ற 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply