அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி திட்டம் வகுத்துள்ளார். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணத்தை வாரி இறைக்க யூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் போது, இந்த 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் குறைந்தது 9 தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெற்றால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும். இதனால் மக்களவை தேர்தலை விட 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் எடப்பாடி அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. 18 தொகுதிகளிலும் அதிமுக பணத்தை வாரி இறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு தொகுதிக்கு 2 அமைச்சர்கள் என 18 சட்டமன்ற தொகுதிக்கும் 32 அமைச்சர்களும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஆண்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அத்தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்கள் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் அமமுக சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அவர்களுக்கு எம்.பி சீட் வழங்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது அதிமுக ஆட்சியை தக்க வைக்க டிடிவி மறைமுகமாக உதவுகிறார் என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அதிமுக பண மழை பொழியும் என்பது உறுதியாகியுள்ளது.