140 சவரன் வெறும் 40 சவரன்..! வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான ஓராண்டில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், பெங்களூருவில் மின் பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான இரண்டு மாதங்களில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சென்னையில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்த பிரியங்கா நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணத்தின் போது பெண் வீட்டார் 140 சவரன் நகை போடுவதாக கூறி விட்டு வெறும் 40 சவரன் மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது பிரியங்காவின் தற்கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தினேஷ்குமாரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






