--- --:--:-- --

10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் முறைகேடா..? தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட தடை!!

d49e578a-0045-438d-ba61-7ef3786b50f7 (1)

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தான் முறைகேடு என்றால், பள்ளி மாணவர்களுக்கான 10, 11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்தாண்டு முதல் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபட தமிழக கல்வித்துறை தடை விதித்துள்ளது.

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு அம்பலமானது முதல் குரூப் 2 , 2 ஏ, குரூப்1 மட்டுமின்றி காவலர் தேர்வு, ஆசிரியர் தேர்வுகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி தமிழகம் அல்லோகலப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த முறைகேடுகளில் பெரிய புள்ளிகள் சிக்கும் போது பெரும் பூகம்பமே வெடிக்கலாம் என்ற பீதியும் நிலவுகிறது.

 

இந்நிலையில் தான் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் நடைபெறும் தில்லு முல்லுகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. கரூர், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க, முறைகேடுகளில் ஈடுபடுவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

 

வினாத்தாளை முன்கூட்டியே கைப்பற்றுவது, தேர்வு கண்காணிப்பு பணியில் தங்களுக்கு வேண்டிய தனியார் பள்ளி ஆசிரியர்களை திணித்துவிடுவது, விடைத்தாளை துரத்தி விடை திருத்தும் மையத்திலேயே கைவரிசை காட்டுவது என பல்வேறு வகைகளில் இந்த தில்லுமுல்லுகளை தில்லாக செய்து வந்தனர்.

 

இதனாலேயே இந்தக் குறிப்பிட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் மாநில ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடிப்பதுடன், மெடிக்கல், இன்ஜினியரிங் கட் ஆஃப் மார்க் கூடுதலாக பெற்று, அந்த இடங்களை பெருமளவில் ஆக்கிரமித்தனர். ஆனால் நீட் தேர்வு முறை வந்தவுடன் மருத்துவ படிப்பில் இவர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது. ஆனால் பொதுத் தேர்வில் மார்க்குகளை அள்ளுவது குறையவில்லை.

 

இப்போது டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் அம்பலமான நிலையில், தேர்வு முறையில் பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று பள்ளிகளில் நடைபெறும் பொதுத் தேர்விலும் முறைகேட்டை தடுக்க புதிய உத்தரவை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

 

“இந்தாண்டு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரையும் தேர்வு கண்காணிப்பு பணி உள்ளிட்ட தேர்வு தொடர்பான பணியில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.”

Leave a Reply

Right Menu Icon