புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம்..!
புயல், மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும் உரிய நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புயல் மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும், மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த எருதுகளின் உரிமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், கன்றுகளின் உரிமையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் அறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று உணவு, குடிநீர் வழங்கவும் தேவைக்கேற்ப நடமாடும் உணவகங்கள் மூலம் சூடான உணவுகளை விநியோகிக்கவும் உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அடங்கிய குழுக்களையும் முதலமைச்சர் அமைத்துள்ளார்.






