இனி ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்..!
சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்து பொது போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதிகொண்ட சென்னை ஒன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். பரபரப்பான சென்னை மாநகரில், பொது போக்குவரத்தை கண்டுபிடித்து, அதற்கு டிக்கெட் எடுக்க காத்திருந்து, குறிப்பிட்ட இடத்திற்கு துல்லியமாக செல்வது அவ்வளவு எளிதல்ல… இதனை எளிமையாக்கும் நோக்கில், சென்னையில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் பணிகளை, CUMTA எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இது, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் ஒரே மொபைல் ஆப் மூலம் அணுகுவதற்கு வழிவகை செய்துள்ளது. “சென்னை ஒன்” என பெயரிடப்பட்டுள்ள அந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதில், பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்து பொது போக்குவரத்து சேவைகளுக்கும் டிக்கெட் பெறலாம். ஆன்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள், பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில், மொபைல் எண்ணை பதிவிட்டு, ஓடிபி மூலம் உள்ளே நுழைந்த பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மாற்றுத்திறனாளியா உள்ளிட்ட சுய விவரங்களை கொடுத்தால், பயனர் கணக்கு உருவாகி விடும். எந்த போக்குவரத்தை பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனை தேர்வு செய்து, எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
உதாரணத்திற்கு பேருந்து சேவையை தேர்வு செய்தால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழித்தடத்தில் உள்ள அனைத்து பேருந்துகளின் பட்டியலும் அந்த செயலியில் வரும். அதனை தேர்வு செய்து, யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தினால் டிக்கெட் பெற்று விடலாம். அதனை நடத்துநரிடம் காட்டி விட்டு பேருந்தில் பயணிக்கலாம்.
இதே நடைமுறை தான், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களுக்கும். ரயில்களின் நேரங்களும் அதில் இடம்பெறுவதால், பொதுமக்கள் தங்கள் பயணங்களை துல்லியமாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.
மேலும், “ஒரு நகரம் ஒரு டிக்கெட்” என்ற அம்சத்தின் வாயிலாக, ஒரே கியூ ஆர் கோட் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி, பல பொது போக்குவரத்துகளை பயன்படுத்தி வேலைக்கு செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இத்தகைய அம்சங்கள் கொண்ட “சென்னை ஒன்” செயலி பொது போக்குவரத்து சேவையில் முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தை தொடர்ந்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட சேவைகளும் இதில் விரைவில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அமைப்பின் 2 ஆவது ஆணைய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள நிலையில், சென்னை பெருநகரப் பகுதிக்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






