--- --:--:-- --

திமுகவில் இணைந்தது ஏன்.? – ஓ.பன்னீர் செல்வம்

2

திமுகவில் தன்னை இணைத்து கொண்டது ஏன்? என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுகவில் உச்சபட்ச பதவியில் இருந்தவரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகாலம் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த ஆட்சி திமுகவின் ஆட்சி. எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கால அறிவிப்புகள் பூஜ்ஜியமாக தான் இருக்கிறது. மீண்டும் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும்.

திராவிட கழகத்தின் தாய்கழகத்தில் மீண்டும் மன மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன். அண்ணா தொடங்கிய கருணாநிதி கட்டிக்காத்த திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார். மேலும், “அண்ணா ஆரம்பித்த, என்னுடைய தாய் கழகமான திமுகவில் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து அரசியல் பண்பாடு உடன் ஆட்சியையும், கட்சியையும் ஸ்டாலின் வழிநடத்துவதை உணர்ந்து திமுகவில் இணைந்துள்ளேன். அரசியலில் இன்று சர்வாதிகாரியாக, ஆணவப்போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி இனி வெற்றி பெற முடியாது. இந்த சூழலை அதிமுகவில் அவர் உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லட்சகணக்கான அதிமுக தொண்டர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

நாடு திமுக தலைவர் ஸ்டாலினை உற்று நோக்குகிறது. அரசியல் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற இலகணத்துடன் ஸ்டாலின் கட்சியை நடத்துகிறார். அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். நல்லாட்சி, சிறந்த ஆட்சி, சீர்மிகு ஆட்சியை ஸ்டாலின் கொடுத்து வருவதை நாடு கவனித்து வருகிறது. தமிழக பெண்களுக்கான உதவிகளை செய்து வருகிறார்.

 

சட்டமன்ற வரலாற்றில் அண்ணா எப்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் எப்படி சம வாய்ப்பு கொடுத்தாரோ, ஸ்டாலினும் அதேபோல செயல்பட்டு வருகிறார்.நான் முதல்வராக பொறுப்பேற்றிருந்தபோது, கருணாநிதி என்னை ‘பச்சை தமிழர் பன்னீர் செல்வம்’ என பாராட்டினார். திராவிட இயக்கத்தையும், கொள்கையையும் காக்க திமுகவே தலைசிறந்த இயக்கம். திமுகவில் நான் ஒரு தொண்டனாக இணைந்திருக்கிறேன்.

 

திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இது நான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு. அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. அது மறைந்துவிட்டது.வரும் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக போட்டியிடுவேன். மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு என்றும் ஆதரவு கொடுப்பேன். கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை” என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon