--- --:--:-- --

ஜன நாயகன் படத்திற்கு எதிராக புகார் கொடுத்த அந்த நபர் யார்..?

4

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு கூறியுள்ளது. அரசியல் பக்கம் சாய்ந்துள்ள விஜயின் கடைசி படம் என்பதால், அவரது கட்சியினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதேபோல் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த பராசக்தி நான்கு நாள்கள் முன்னதாகவே பத்தாம் தேதி ரிலீஸாகிறது. இதன் காரணமாக இந்தப் பொங்கல் விஜய் Vs சிவகார்த்திகேயன் போட்டி என பலர் கொளுத்திப் போட்டார்கள். ஆனால் இது போட்டி பொங்கல் இல்லை; அண்ணன், தம்பி பொங்கல்தான் என விளக்கியிருந்தார் சிவகார்த்திகேயன். இரு படங்களின் டிரைலர்களும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த மாதம் படத்தை தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

ஜனநாயகன் படத்திற்கு வேண்டும் என்றே தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில்தான் தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க வலியுறுத்தி நீதிமன்ற படிகளை ஏறியுள்ளது ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ்.

கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பி.டி. ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். தணிக்கை வாரியம் முதலில் யுஏ சான்று வழங்குவதாகக் கூறியதாகவும் ஆனால், திடீரென தணிக்கை சான்று குறித்து முடிவெடுக்க மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி உள்ளதாகக் கூறியதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பு குற்றஞ்சாட்டியது.

மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகப் புகார் வந்துள்ளதாக தணிக்கை வாரியம் கூறியதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் விவரித்தது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி பி.டி.ஆஷா, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்ததுடன் ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தணிக்கை செய்யப்பட்ட பிறகு புகார் அளித்த அந்த நபர் யார் என்றும், அந்த புகாரை புதன்கிழமை தாக்கல் செய்யவும் தணிக்கை வாரியத்துக்கு ஆணையிட்டார். மேலும் ஜனநாயகன் பட வெளியீட்டை ஏன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக் கூடாது என்றும், தை பிறந்தால் வழி பிறக்குமே எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Right Menu Icon