--- --:--:-- --

எங்கெல்லாம் இன்று கனமழை வெளுக்கும்..?

1

ராணிப்பேட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ராணிப்பேட்டை, ஆற்காடு, பனப்பாக்கம், நெமிலி, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் நேற்று கனமழை பெய்தது. தஞ்சாவூர் மற்றும் திருவையாறு, அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுப்புறப் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை நகர்ப்பகுதிகள், நமனசமுத்திரம், அரிமளம், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

இதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை சுற்றுப்புறப் பகுதிகளில் பகலில் வெயில் வாட்டிய நிலையில், இரவில் மழை கொட்டித்தீர்த்ததால் வெப்பம் தணிந்தது. மேலும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாளையம்பட்டி, சுக்கிலநத்தம், வாழ்வாங்கி, பந்தல்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்துவாங்கியது.

 

இதனால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரை மாநகரப் பகுதிகளிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், அவனியாபுரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் மிதமான மழை பெய்தது.

 

மழையில் நனைந்தபடி சுற்றுலாப் பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியிலும் கனமழை பெய்தது. தவளகுப்பம், பாகூர், ஏம்பலம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்த நிலையில், சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 13-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Right Menu Icon