டிட்வா புயல் எப்போது கரையை கடக்கும்?
நாகை வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயலானது, மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, காலை 11.30 மணி நிலவரப்படி, நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தெற்கே 150 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாளை அதிகாலை, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை டிட்வா புயல் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டிட்வா புயல் காரணமாக சென்னையை நோக்கி அடர்த்தியான மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தென்பகுதிகளில் அடர்த்தியான மழைப் பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், சூறாவளியின் மையத்தை சுற்றி மேகமூட்டம் காணப்படாத நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேகங்கள் அதிகரிக்கக் கூடும் எனவும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் தரைக்காற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தரைக்காற்று, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசும் என்றும், சில சமயங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று தரைக்காற்று, மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் நாளை வடதமிழகத்தை நெருங்கும் சூழலில், அன்றைய தினம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தரைக்காற்று 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலும் நாளை தரைக்காற்று, 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.





