கொடநாடு பங்களாவில் இருந்தது என்ன? – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
கட்சியில் இருந்து தன்னை நீக்கிய பிறகு, ரகசியங்களை வெளியிடுவேன் என்று எடப்பாடி பழனிசாமி பயந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், கொடநாடு வழக்கு குறித்து பேசினார்.
அதில், “வாட்ச்மேனைக் கட்டிப்போட்டு கொடநாடு பங்களாவுக்குள் சென்று முக்கிய கோப்புகளைத் தேடத்தான் சென்றார்கள். அது யார்? ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள், சட்டமன்ற, மாவட்ட செயலாளர்கள் குறித்து ஜெயலலிதா கேட்ட தகவல்களை உளவுத்துறை கொடுத்த தகவல்கள் போயஸ் கார்டனிலேயே இருந்தது. அவைகளைப் படித்துப்பார்த்து நானும் டாக்டர் வெங்கடேசனும் அப்போதே கிழித்துப் போட்டோம்.பலரின் வண்டவாளங்கள் இருந்தது.
அதைப்போல கொடநாட்டில் இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை யாரோ பயமுறுத்தி இருக்கிறார்கள். அதனால் நானும் சசிகலாவும் இல்லாத நேரத்தில் கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்தார்கள். அதில் எத்தனை பேர் இறந்தார்கள். இதனால் பயனடைந்தது யார்? யார் ஆட்சியில் நடந்தது?.எடப்பாடி பழனிசாமி குறித்த தகவல்களை வெளியில் விட்டுவிடுவேன் எனப் பயந்துதான் கொடநாடு பங்களாவுக்குள் சென்றார்கள்.
ஒருபோதும் நான் பிளாக்மெயில் அரசியல் செய்ய மாட்டேன். நான் சவுக்கோ சாட்டையோ கிடையாது. என்றுமே பழனிசாமிக்கு டிடிவி தினகரன் சிம்மசொப்பனம் தான். அவரை வீழ்த்தாமல் நான் ஓய மாட்டேன். நான் வீழ்த்தும் முன் அவரே வீழ்ந்து விடுவார். அவரே கொல்லி கட்டையை வைத்து தலையை சொரிந்து வருகிறார்.
அவர் குடும்ப அரசியல் தான் நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்துள்ள கற்பனைவாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் A1 என செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கருத்தை தினகரன் வழிமொழிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






