--- --:--:-- --

IIT செல்லும் பழங்குடியின மாணவி..உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்..!

2

ரசு பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்று IIT-யில் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி. கல்வராயான் மலைப் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆண்டி தையல் வேலை செய்து, தனது 4 பிள்ளைகளில் முதல் 2 பிள்ளைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார்.

 

ஆனால், ஓராண்டுக்கு முன்னர் புற்றுநோய் பாதித்து ஆண்டி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவரது 3-வது மகளான ராஜேஸ்வரி, JEE தேர்வில் வெற்றிபெற்று IIT-யில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் 417-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.தமிழ்நாட்டின் அரசு பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்று IIT-யில் படிக்கத் தேர்வாகியுள்ள முதல் நபர் என்ற பெருமையை மாணவி ராஜேஸ்வரி பெற்றிருக்கிறார்.

 

இவருக்கு IIT மெட்ராஸில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மாணவி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 438 மதிப்பெண்களையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்.அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஸ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon