--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்..! இதுவரை 1.30 லட்சம் பேர் மனு!!!

y

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சியினர் நாளை தான் மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், திருவிழா போல் விறுவிறுப்பாகவும் நெரிசலும் ஏற்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 9-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

 

மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 314 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 9,624, ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு76,746 இடங்கள் என சுமார் 92 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

 

கடந்த 9-ந்தேதிவேட்பு மனுத்தாக்கல் தொடங்கினாலும், உச்சநீதிமன்ற வழக்கில் தீர்ப்பை பலரும் எதிர்பார்த்து தயக்கம் காட்டினர். இதனால் முதல் 3 நாட்கள் வேட்பு மனுத்தாக்கல் மந்தமாக இருந்தது. தேர்தலுக்கு தடையில்லை என கடந்த புதன்கிழமை தீர்ப்பு வெளியான நிலையில், அடுத்த 3 நாட்களில் சூடுபிடித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (13-ந் தேதி) மட்டும் 71, 763 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். நேற்று வரை சுமார் 1.30 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்குத்தான் பெரும்பாலானோர் மனு செய்துள்ளனர்.

 

மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாள்ர்கள் களம் காண்கின்றனர். பிரதான கட்சிகளான ஆளும் அதிமுகவும், எதிர்க் கட்சியான திமுகவும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து மும்முரமாக பேச்சு நடத்தி வருகின்றன. இன்றைக்குள் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கீடு செய்யும் பணி நிறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

இதனால் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவோர் இறுதி நாளான நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய மும்முரம் காட்டுவர் என்பதால், நாளை பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17, 18 தேதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும்.19-ம் பாலை 3 மணி வரை மனுக்கள வாபஸ் பெறலாம். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பின் ஒரு வாரத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் திருவிழா களை கட்டுவது நிச்சயம்.

Leave a Reply

Right Menu Icon