நவீன தமிழ்நாட்டை செதுக்கிய கருணாநிதியின் 102ஆவது பிறந்தநாள் இன்று..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று, அவர் தமிழகத்தில் வகுத்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். தன் சிந்தனையால், நிர்வாகத் திறனால், எளிய மனிதர்களின் மீதான அக்கறையால், தீட்டிய திட்டங்களால் தமிழ்நாட்டின் முகத்தை மாற்றியமைத்த தலைவர் மு. கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை பதவியேற்றபோதே சமூக நீதிக்கான விதையை ஆழ ஊன்றியவர் கருணாநிதி. ஆம், அதுவரை வழக்கில் இருந்த மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா முறைக்கு முடிவு கட்டினார்.
பிறகு, குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கினார். சமூகநீதிக் கருத்துகளை சுவாசித்த அவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உருவாக்கியதோடு, இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கும் உள் ஒதுக்கீட்டை வழங்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.கடைக்கோடி மனிதனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட அவர், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி கிராமப்புற மாணவர்களை மேற்படிப்புகளுக்குச் செல்ல ஊக்குவித்தவர்.
மேலும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நீக்கி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கான படிப்பிற்கு கதவுகளைத் திறந்து விட்டார்.
தமிழ்நாட்டில் தனியாரிடம் இருந்த பேருந்து போக்குவரத்தை நாட்டுடமையாக்கிய அவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கியதுடன் குக்கிராமங்களுக்கும் மினி பஸ்களை இயக்கி தொடர்பு வசதியைப் பெருக்கினார்.
சின்னஞ்சிறு கிராமத்திற்கும் இலவச மின்சாரம் வழங்கியதோடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அளித்த பெருமையும் கருணாநிதியையே சேரும்.தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகளைத் திறந்து, இடைத்தரகரின்றி விவசாயிகள் தாங்கள் விளைவித்த உணவுப் பொருட்களைத் தாங்களே விற்பனை செய்ய வழிகாட்டினார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கைகள், திருநம்பிகள் எனப் பெயர் சூட்டியதோடு நிற்காமல், திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்தது, ஊனமுற்றோர் என்ற சொல்லை ஒழித்து மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தி அவர்களுக்கான தனித் துறையை உருவாக்கியது என கருணாநிதியின் சாதனைப் பட்டியல் ஏராளம்.
குமரிமுனையில் 133 அடிக்கு உயர்ந்து நிற்கும் திருவள்ளுவரின் கம்பீரமான கற்சிலையை எழுப்பிய கருணாநிதி, வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல், செம்மொழிப் பூங்கா என தலைநகர் சென்னையைச் செதுக்கியவர். தகவல் தொழில்நுட்பத் துறைக்கென இந்தியாவில் முதல் முறையாக ஒரு கொள்கையை அறிவித்தவர் கருணாநிதி.
மேலும் டிட்கோ, டைடல் பார்க், சிப்காட் தொழில் பூங்காக்கள் போன்றவை கருணாநிதி ஆட்சியிலேயே உருவாக்கப்பட்டன. சாதி, பேதமற்ற சமூகத்திற்கான இலக்குடன் தமிழ்நாடு முழுவதும் பெரியார் நினைவு சமத்துவப் புரங்களை உருவாக்கிய அவர், மாவட்டங்கள் மாத்திரம் சமத்துவப் புரங்கள் அல்ல, இந்த மாநிலமே சமத்துவபுரமாக மாற வேண்டும் எனச் சூளுரைத்தார்.






