--- --:--:-- --

வடக்கினை வசப்படுத்துகிறார் விஜயகுமார்… தெற்கில் செல்வராஜுக்கு வெற்றி வாய்ப்பு!

selvaraj vijayakumar

தொகுதியில் பல பணிகளை செய்திருப்பதாலும், ஊரகப்பகுதியில் இலைக்கு உள்ள மவுசாலும், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிவாகை சூட விஜயகுமார் தயாராகி வருகிறார். திருப்பூர் தெற்கில் திமுக வேட்பாளர் செல்வராஜ், எளிதாக வெற்றி வாகை சூடுகிறார்.

 

திருப்பூர் வடக்கு

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் முக்கியமானது கிராமப்புறப்பகுதிகளை அதிகமும், நகரப்பகுதிகளை ஓரளவும் கொண்டிருக்கும் வடக்கு சட்டமன்றத் தொகுதி ஆகும். இங்கு அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ கே.என். விஜயகுமாரே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

திமுக கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி சுப்ரமணியம் போட்டியிடுகிறார். அமமுக கூட்டணியில் தேமுதிக பகுதி கழக செயலாளர் செல்வகுமார், மக்கள் நீதிமய்யம் சார்பில் சிவபாலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் களத்தில் உள்ளனர்.

சிட்டிங் எம்.எல்.ஏ விஜயகுமார், கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு பலவற்றை செய்துள்ளார் என்ற பெயரையே விஜயகுமார் பெற்றிருக்கிறார். மிகவும் அமைதியானவர்; அன்பானவர். வார்டு கவுன்சிலரே இந்த காலத்தில் பந்தா காட்டும் நிலையில், ஒரு எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் எளிமையாக பழகுபவர். கட்சியில் எந்த சர்ச்சையிலும், உட்கட்சி பூசலிலும் சிக்காதவர். நிர்வாகிகளுடன் அனுசரணையாக இருப்பவர். மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளது. முறைகேடு போன்ற எந்த புகாரும் இல்லாததால்தான் அதிமுக தலைமை இவருக்கு மீண்டும் வாய்ப்பை தந்துள்ளது.

 

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் பெரும்பாலானவற்றை தொகுதியில் நிறைவேற்றி இருக்கிறார். ஊரகப்பகுதிகளில் அத்திக்கடவு திட்டம் வாயிலாக குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவற்றை செய்து தந்துள்ளார். பல இடங்களில் சாலை வசதி செய்து தரப்பட்டு வருகிறது. பல இடங்களில் பணிகள் தாமதமானாலும் வருவது பொதுவாக பணி நடைபெறுகிறதே என்று தொகுதிவாசிகள் திருப்திபட்டுக் கொள்கின்றனர். கொரோனா காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி சார்பில் நிவாரண உதவிகளை வழங்கி இருக்கிறார். பிரச்சனை என்று தன்னை சந்திக்க வருபவர்களிடம் எம்.எல்.ஏ விஜயகுமார் குறைகளை கேட்டு, முடிந்தளவுக்கு உடனடியாக செய்து தந்துள்ளார்.

 

அதிமுகவின் எஃகு கோட்டையாக விளங்கும் திருப்பூர் வடக்கு தொகுதி என்பதால், இங்கு அமமுகவால் வாக்குகள் பிளவுபடும் சாத்தியமில்லை. ஏனெனில், ஊரகப்பகுதிகளில் இரட்டைஇலைக்குத்தான் எங்கள் ஓட்டு என்ற மனநிலை உள்ளது. பாரம்பரிய அதிமுக ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இரட்டை இலைக்கே கிடைக்கும்; அத்துடன் எளிமையான அணுகுமுறையால் வாக்காளர்களை விஜயகுமார் கவர்ந்து வருகிறார். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமான சூழலே காணப்படுகிறது. இம்முறையும் வடக்கை வசப்படுத்துவது விஜயகுமார் என்பதே குற்றம் குற்றமே இணையதளத்தின் கணிப்பாக உள்ளது.

 

சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமாரை, “குற்றம் குற்றமே” வார இதழ் சிறப்பாசிரியர் கண்ணதாசனுக்கு அளித்த மினி பேட்டியில், ”மீண்டும் மாண்புமிகு முதல்வர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற விருப்பத்தை பொதுமக்கள் உற்சாகமாக வெளிப்படுத்தினார்கள். கிராமப்புறங்களில், ஊராட்சிகளில், வார்டுகளில் மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இது, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு திட்டங்களை சிறப்பாக செய்து நிறைவேற்றியிருப்பதே காரணம் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

திருப்பூர் தெற்கு

 

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் இறுதிகட்ட நிலவரம், திமுக வேட்பாளர் செல்வராஜ், எளிதாக வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளதை காட்டுகிறது.

 

தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. குணசேகரன், திமுக சார்பில் செல்வராஜ், அமமுக சார்பில் விசாலாட்சி, மக்கள் நீதிமய்யம் சார்பில் அனுஷா ரவி, நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.

 

கடந்த 5 ஆண்டுகளில் சிட்டிங் எம்.எல்.ஏ. குணசேகரன் ஒருசில பணிகளை செய்தாலும், அவர் மீது பெரியளவில் தொகுதி மக்கள் மத்தியில் அதிருப்தி இல்லாவிட்டாலும், அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நகரின் மையப்பகுதி என்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் தீராத தலைவலியாக இருந்து வந்துள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதியில் பழைய பேருந்து நிலையம், பல்லடம், தாராபுரம் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. எனினும் முற்றிலும் குறையவில்லை.

 

போதாக்குறைக்கு குணசேகரனின் பிரசாரப்பணிகளில் சுறுசுறுப்பு இல்லை. அதிமுக நிர்வாகிகளை குணசேகரன் அலட்சியப்படுத்துவதாகவும், மதிப்பதில்லை என்றும் அக்கட்சியினர் வேதனையோடு சொல்கின்றனர். யாரையும் குணசேகரன் கண்டு கொள்வதில்லை; பிரசாரத்திற்கு கட்சியினரை அழைத்துச் செல்வதில்லை என்பது, அதிமுகவினரின் குற்றச்சாட்டாக உள்ளது. எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அசட்டு நம்பிக்கையில் இருக்கும் குணசேகரனின் கனவில், அவரது அலட்சியமே இம்முறை மண்ணை தூவும் என்கின்றனர். அமமுக சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் மேயர் விசாலாட்சி தான். அவர், அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை கணிசமாக பிரிக்கிறார்.

திமுக வேட்பாளராக தெற்கு தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ், திருப்பூரில் நன்கு அறிமுகமானவர். பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். திருப்பூர் நகராட்சி தலைவராக 1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் இருந்தார். 2007ம் ஆண்டில் திருப்பூர் மாநகராட்சியானதும், முதல் மேயர் என்ற வரலாற்று சிறப்பை அவர் பெற்றார். செல்வராஜ், வீதிவீதியாகச் சென்று மக்களை சந்திப்பது, குறைகளை கேட்டறிவது, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே குழு ஏற்படுத்தி தேர்தல் வேலை செயது என்று என்று படுசுறுசுறுப்பாக களமிறங்கியுள்ளார்.

 

கருவம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போரை சந்தித்து, அவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். நொய்யல் வீதியில் ஓடை புறம்போக்கில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறார்.

 

அதிமுகவில் நிர்வாகிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லாதது, சிட்டிங் எம்எல்ஏ என்ற பலவீனம், அமமுகவால் ஓட்டுகள் பிரிவது போன்ற அம்சங்கள், குணசேகரனின் வெற்றிக்கு தடையாக உள்ளன. தொகுதியில் பெரும்பாலானவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதாக குறிப்பிட்டனர். ஒட்டு மொத்தத்தில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக செல்வராஜ் வெற்றி வாகை சூடுவார் என்பதை மறுப்பதற்கில்லை.

 

நமது “குற்றம் குற்றமே” புலனாய்வு வார இதழ் சிறப்பாசிரியர் கண்ணதாசனுக்கு, திமுக வேட்பாளர் செல்வராஜ் அளித்த பேட்டியில் எனது வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு காரணம், மத்தியில் ஆளும் பாஜக பாசிச அரசின் கொள்கைகள் தான். அந்த கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு அதிமுக ஆதரிப்பதால், சிறுபான்மையின மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 

பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகன் வடிவம் பெற்று, மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேர்தல் வெற்றிக்கு தேர்தல் அறிக்கையும் ஒரு காரணமாக இருக்கும். எனவே, தெற்கு தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு உறுதி என்று நம்புகிறேன் என்றார்.

*

Leave a Reply

Right Menu Icon