தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதம் சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பு..!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதம் சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள், காவல் துறையினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக மூத்த நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். ஏறத்தாழ 9 மணி நேரம் நடந்த விசாரணையில் கூட்டத்திற்கு அனுமதி பெற்றது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து, 2வது நாளாக இன்றும் அனைவரிடமும் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், ஜனவரி மாதம் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





