--- --:--:-- --

சுப்ரீம் கோர்ட் வழங்கியது இடைக்காலத் தீர்ப்பு தான்!

2

த.வெ.க பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய த.வெ.க மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

 

இந்த உத்தரவுக்குப் பின் உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் , கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தொடரும் என்றும் கூறினார்.

 

யார் மீது தவறு, யாரால் நெரிசல் ஏற்பட்டது என்பதை விசாரித்துக் கூற அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு உரிமை உள்ளது. தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் குறித்து உச்ச நீதிமன்றம் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது இடைக்கால ஆணைதான். இறுதி உத்தரவு என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

இந்த ஆணை இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது தான். இன்றுவரை எஸ்.ஐ.டி. (சிறப்பு புலனாய்வு குழு) நடத்திய விசாரணை சரியானதுதான் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இன்று வரை நடத்திய விசாரணை விவரங்களை சி.பி.ஐ.க்கு மாற்றும்படிதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய சி.பி.ஐ விசாரணை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக எந்தப் பயனும் இல்லை. சிபிஐ விசாரணை கேட்காத த.வெ.க. எதற்காக இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ விசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு மோசடியாகத் தாக்கல் செய்யப்பட்டது என நீதிமன்றத்திற்குத் தெரிந்தால், அந்த உத்தரவையே உச்ச நீதிமன்றம் திரும்ப பெறக்கூடும்.

 

வழக்குத் தாக்கல் செய்தது மோசடி எனத் தெரியப்பட்டால் தீர்ப்பு செல்லாததாகிவிடும். இடைக்கால உத்தரவு பிறப்பித்த பின்புதான் பாதிக்கப்பட்ட இருவரும் காணொலி மூலம் ஆஜரானார்கள். உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தமிழக அரசின் தலையீடு இல்லை. எஸ்.ஐ.டி. வேண்டுமென்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கேட்கவில்லை.

 

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத்தான் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. உயர் நீதிமன்ற உத்தரவில் அரசு தலையிட்டதாக த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறினால், அது நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும். “வாய்க்கு வந்தபடி த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருக்கிறார்,” என்றும் வில்சன் கண்டனம் தெரிவித்தார்.

Right Menu Icon