--- --:--:-- --

திருப்பூர் மேயர் மேயரேயல்ல! பல்லடம் பாஜக கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்.. திமுக ஆட்சியில் மக்களுக்கு மரியாதை இல்லை என காட்டம்

638c35a1-e72c-4da5-8ea8-aa2e6519ea58

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மரியாதை இல்லை; திருப்பூரின் மேயர் மேயராகவே செயல்பட முடியவில்லை என்று, பாஜக தலைவர் அண்ணாமலை, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசி சூட்டை கிளப்பியுள்ளார்.

 

த்திய பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில், மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனையை விளக்க பொதுக்கூட்டம், தாமரை மாநாடு என்ற பெயரில், திருப்பூர் அருகே பல்லடம் கரையாம்புதூரில், ஜூன் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் செல்வகுமார், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,  வழக்கம் போல் அண்ணாமலை பேச்சில் ஆவேசமும், காரமும் இருந்தது. ஆளும் திமுகவை ஒரு பிடிபிடித்ததோடு, திருப்பூர் அரசியலையும் கிண்டல் செய்தார்.

 

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பாரதப் பிரதமர் மோடியின் 8 ஆண்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஏனென்றால், 8 ஆண்டுகளாக நாட்டில் எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. மோடி என்ற மந்திரச்சொல்தான், மக்களுக்கு தைரியத்தை கொடுத்திருக்கிறது.

 

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் 400 எம்.பி.களுடன் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். இதே பாதையில் இந்தியா 10 ஆண்டுகள் பயணம் செய்தால், உலகத்தின் வல்லரசாக மாறிவிடும். கொரோனா தடுப்பூசியில் 200 கோடி டோஸ் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ளது.

 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மோடி கொண்டு வந்தபோது எதிர்க்கட்சிகள், அது சாத்தியமில்லை என்று கூறின. கடந்த மாதம் மட்டும்10 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 14 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்று சொல்பவர்கள் 70 ஆண்டுகளாக குடிசை வீடுகளாகத்தான் வைத்திருந்தனர்.

 

நாடு சுதந்திரமடைந்த 67 ஆண்டுகளில், 2014 வரை மொத்தமாக கட்டப்பட்ட கழிப்பறைகள் 5.50 கோடிதான். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் மத்திய பாஜக அரசு 11.50 கோடி கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் பொதுமக்களுக்கு மரியாதை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மனு கொடுக்க செல்பவர்களை அடிக்கிறார்கள். அப்பாவி மக்களை அடிப்பதுதான் திராவிட மாடல்.

 

சில இடங்களில் பெருச்சாளி இங்கேயும், அங்கேயும் ஓடும். அப்படி ஒருவர்தான் தர்மபுரி எம்.பி. 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமி தாய்க்கு பூஜை போடுவது வழக்கம். அவர் யார் என்றே பலருக்கு தெரியவில்லை. திராவிட ஆட்சியில் பூஜை போடுவதா என்று பூஜாரி அரசு அதிகாரிகளை கொச்சைப்படுத்தி உள்ளார்.

 

இதை நாம் கண்டிக்க வேண்டும். இப்படியே விட்டால் கோயிலுக்கு போகக் கூடாது. பொட்டு வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், இதுபோன்ற மதத்தை அவமானப்படுத்துபவர்களின் சீட்டை கிழித்து அனுப்ப வேண்டும். இவ்வாறு, ஆவேசம் பொங்க அண்ணாமலை பேசி முடித்தார்.

 

திருப்பூர் மீது மோடிக்கு அக்கறை!

 

பாஜக தலைவர் அண்ணாமலை தனது பேச்சில், திருப்பூர் அரசியலை ஒருபிடி பிடித்தார். அவர் பேசுகையில், இங்குள்ள திருப்பூரில் இருக்கும் மேயர், உண்மையில் மேயராக இல்லை. துணை மேயர், மேயர் போல செயல்படுகிறார். இங்குள்ள திமுக எம்.எல்.ஏ நான்தான் மேயர் என்பது போல நடந்து கொள்கிறார். மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரோ, என் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்று, தன்னை மேயராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்குள் உள்ள போட்டியால், மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

பின்னலாடை நகரான திருப்பூரில், 37 ஆண்டுகளுக்கு முன், 5 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி என்ற நிலை இருந்தது; தற்போது உள்நாட்டில் மட்டுமே, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு திருப்பூர் வளர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 36 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.

 

திருப்பூருக்கு நிதி கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் கேட்பதற்கு மனமில்லை. பஞ்சு விலை உயர்ந்தபோது, மத்திய அமைச்சரை திருப்பூருக்கு அழைத்து வந்து, பேசி விலை குறைக்கப்பட்டுள்ளது. கறிக்கோழி பிரச்னையில் கோழி வளர்ப்போர் – முகவர்கள் இடையே தமிழக அரசு, 15 நாட்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ஜ., களத்தில் இறங்கி கோட்டையை நோக்கி செல்லவும் தயங்காது” என்று பேசினார்.

 

கல்லூரியில் பிரசாரம்…பாஜகவினரால் பரபரப்பு!

 

வருங்கால தலைமுறையினரான மாணவர்களையும் பல்லடம் மாநாட்டுக்கு வரவழைக்கும் வகையில், ‘செல்ஃபி வித் அண்ணா’என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாம், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி அரசு கல்லூரி நுழைவாயில் முன்பு நடைபெற்றது. இங்கு தரப்படும் கூப்பனில் தேர்வாகும் மாணவகள், அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையறிந்த இரு கல்லூரிகளின் முதல்வர்களும், பாஜக அறிவிப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தங்களின் அனுமதி பெறாமல் கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும் மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனரிடம், அவசர அவசரமாக புகார் அளித்தனர்.

 

எனினும், சிக்கண்ணா கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி கல்லூரி நுழைவுவாயில் கதவை ஒட்டிய பகுதியில் பாஜகவை சேர்ந்த பெண்கள் பிரச்சாரம் செய்தனர். இதனால், கல்லூரி நிர்வாகத்தினர், முன்பக்க கதவை திறக்காமல், பின் வழியாக மாணவிகளை வெளியே அனுப்பினார். தகவல் அறிந்து அங்கு வந்த வடக்கு மாவட்ட பாஜக கட்சி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் அடைக்கப்பட்டிருந்த கல்லூரியின் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. இதனால், இரு கல்லூரிகளிலும் பரபரப்பு நிலவியது.

Right Menu Icon