வடமாநிலத்தவரை கத்தியால் குத்தி செல்போனை பிடுங்கியவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு..!
கடந்த மே மாதம் 14ம் தேதியன்று திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணியாம்பூண்டி, TSK கம்பெனி ஹாஸ்டலில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்குமார் (21) என்பவர் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு செல்லும்போது மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ஆகாஷ்குமாரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்தி காயப்படுத்தி செல்போனை பிடுங்கி சென்றனர்.
காயப்பட்ட ஆகாஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் காவல் ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாண்டியராஜ் என்பவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி ஆணையிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாண்டியராஜ் (20) என்பவரை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.






