வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் இன்றுடன் நிறைவு..!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, வழக்கம் போல ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், ஐடிஆர் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று தான் கடைசி நாள் ஆகும். ஒரு வேளை, இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டப்பிரிவு 234 F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வந்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அதே சமயம், 5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டியிருந்தால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், வருமான வரி சட்டப்பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டும்.
எனினும், டிசம்பர் 31ஆம் தேதி வரை திருத்தப்பட்ட மற்றும் தாமதமானமான வருமான வரி கணக்கை வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்த காலக்கெடு அனைவருக்கும் பொருந்தாது என்று வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தனிநபராக வரி செலுத்துவோர், தணிக்கை தேவையில்லாத இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த காலக்கெடு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. இன்றைக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வில்லை என்றால், நிதி சார்ந்த பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ரீஃபண்ட் பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
மேலும், பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் போது ஏற்படும் இழப்புகளை சரி செய்வது உட்பட கேரி-ஃபார்வர்டு சலுகைகளையும் இழக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.






