நாட்டின் முதல் ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியது..!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஊசியில்லா கொரொனா தடுப்பு ஊசி மருந்தான சைகோடியை செலுத்தும் பணி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் தொடங்கியுள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள டிஎன்ஏ அடிப்படையிலான இந்த தடுப்பு மருந்து 28 நாட்கள் இடைவெளியில் மூன்று டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்படுகிறது.
புதிய வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் இந்த தடுப்பு மருந்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் இதனை சேமித்து வைக்கலாம் என்றும் சைடஸ் கேடலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் வகையில் கண்டறியப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படுகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்து செலுத்தும் பொழுது வலி ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






