அ.தி.மு.க உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் அரசியல் பரபரப்புக்கு இடையே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற இருந்த அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரம் நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சமாக இருந்து வருகிறது. மேலும், புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஒரு பக்கம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க நயினார் நாகேந்திரன் ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு பெருகி வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க இணைந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் பா.ஜ.க கூட்டணியில் விலகிய ஒ.பன்னீர்செல்வம் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் நாளை மறுதினம் (டிசம்பர் 15ம் தேதி) முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லி சென்று பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம், கடந்த டிசம்பர் 7-ந் தேதி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தார்.
இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது திடீரென, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ந் தேதி நடைபெற இருந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் அரசியல் இறுதி முடிவு தொடர்பான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒத்தி வைக்கப்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் எப்போது நடைபெறும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஒ.பன்னீர்செல்வத்தின் இந்த மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





