--- --:--:-- --

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்..!

3

மிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை நிர்வாகிகளுக்காக அக் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கட்சியை வலுப்படுத்தும் வேலையில் களமிறங்கியுள்ள விஜய் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

 

ஒரு வருடத்திற்கு முன்பே இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய விஜய், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை நடத்தினார். TVK லிங்க் மூலம் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து வந்த நிலையில் தற்போது புதிய செயலியை நிர்வாகிகளுக்காக விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்.

 

அந்த செயலியில் அனைத்து தொகுதியின் வாக்காளர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கு 2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை விஜய் நிர்ணயித்துள்ளார்.

 

இந்த செயலியின் Access மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் அதில் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்க பணிக்கப்பட்டுள்ளனர். ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால் வேறு இடத்திலிருந்து உறுப்பினராக இணைக்க முடியாதவாறு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

எனவே, நிர்வாகிகள் பொதுமக்கள் இல்லத்திற்கு சென்றால்தான் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடியும். இந்த செயலியில் உறுப்பினர் சேர்க்கை மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் நபர்கள், கட்சியில் சேராமல் வெளியே இருந்து ஆதரவு தர நினைப்பவர்கள் போன்ற விவரங்களை வாக்குச்சாவடி முகவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது . இரண்டரை கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் திமுக-வைப்போல் புதிதாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கோடி குடும்பம் இரண்டு கோடி உறுப்பினர் என்ற இலக்கை நோக்கி பயணிக்க உள்ளது.

 

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளின் இல்லத்திற்கு விஜய் நேரில் சென்று கௌரவிக்கவும் முடிவு செய்துள்ளார். அதே போல் தவறான முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

Right Menu Icon