இன்று மிதமான மழை..பலத்த தரை காற்று வீசும்..!
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா- கர்நாடகா–கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.





