வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகம் வளர வேண்டும்..!
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தமிழ்நாடு வளர்ச்சி அடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலை மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ் நாட்டின் வளர்ச்சியை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பெருமை கொள்வது போதாது, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கூறினார்.
அதற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒன்றிய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதியை கேட்டு பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.






