உலகின் மிக மூத்த மொழி தமிழ் என்பது பெருமை..!
விவசாயிகளின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு திரும்ப பெறப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி உலகின் மிக மூத்த மொழி தமிழ் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என தெரிவித்தார். மாநிலங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவிற்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
அதன்படியே சீன அதிபரை தமிழகத்துக்கும், பிரான்ஸ் அதிபரை உத்திரப் பிரதேசத்திற்கும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என்றும் குறிப்பிட்ட பிரதமர் மோடி இந்த ஒற்றுமையை உடைத்து சிலர் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.






