வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..!
இந்திய பயனாளிகளுக்கான தனியுரிமை கொள்கை தரம் குறைந்ததாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பின் தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐரோப்பிய பயனர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்களுக்கான தனியுரிமை குறைந்த தரத்தில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தங்கள் தனிஉரிமையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களுக்கு இருப்பதாகவும் அவர்களை பாதுகாக்க வேண்டியது தங்களின் கடமை எனவும் அவர்கள் கூறினர்.
டிரில்லியன் கணக்கான நிறுவன மதிப்பைவிட மக்கள் தங்கள் தனி உரிமையை அதிகம் மதிக்கின்றனர் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசும் , வாட்ஸ் ஆப் நிறுவனமும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.






