சிவகங்கையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தற்கொலை முயற்சி. மருத்துவமனையில் அனுமதி..!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை, தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் (59). இவர் சிவகங்கை அடுத்துள்ள டி.புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை ரயில்வே நிலைய நூலகத்தின் அருகே கத்தியால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அந்தப் பகுதியில் நடை பயிற்சியை மேற்கொண்டவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, ரமேஷை மீட்டு, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரியின் தற்கொலை முயற்சிக்கு பணிச்சுமையே காரணம் என கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து சிவகங்கை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்கொலைக்கான முழு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரொனா காரணமாக பணி ஓய்வு நீட்டிக்கப்பட்ட நிலையில் அரசு அதிகாரி பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அரசு அலுவலா்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






