சுப்பராயனின் சூப்பர் சூழ்ச்சி! இந்திய கம்யூ. பதவிக்காக ‘நாரதர்’ வேலை.. தோழர்களின் சதியால் திமுகவினர் கவலை!
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறிய பின்னர், முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. திருமுருகன்பூண்டி நகராட்சியில், மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. கூட்டணி, 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 9 வார்டுகளைத்தான் கைப்பற்றியது; கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் – 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 3 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிர்ச்சி வைத்தியம்
திருமுருகன் பூண்டியை பொருத்த வரை, அதிக இடங்களை வென்ற தனிப்பெருங்கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது. அக்கட்சிக்கு மட்டும், 10 வார்டுகள் உள்ளன. எனினும், கூட்டணி பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியே பெரும்பான்மை பெற்றதால், திமுக தரப்பில் பூண்டி நகராட்சி தலைவர் பதவி கிடைக்கும் என்று, பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், கூட்டணியில் இடம் பெற்றுள்ள, வெறும் 3 இடங்களை மட்டுமே வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கி, இங்குள்ள திமுகவினருக்கு, அறிவாலயத்தில் இருந்து அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டது.
ஜீரணிக்க முடியவில்லை
அப்போது முதலே, பூண்டி பகுதி திமுகவினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். உள்ளூர் நிலவரம் என்னவென்று விசாரிக்காமல், யாரோ எங்கிருந்தோ ஒரு ஏசி அறையில் இருந்து முடிவெடுப்பது எப்படி சரியாக இருக்கும் என்று, கழகத்தில் கலகக்குரல்கள் எழுந்தன.
இது, நகராட்சித் தலைவர் தேர்தலிலும் எதிரொலித்தது. பூண்டி 10வது வார்டில் வெற்றி பெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம், தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார். ‘தங்களுக்கு தான் தலைவர் பதவி கிடைக்கும்,’ என்ற நம்பிக்கையில் இருந்த தி.மு.க.வினராலும், ஐந்து இடங்களை வென்று நம்பிக்கையுடன் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினராலும் இதை ஜீரணிக்க முடியவில்லை.
12 ஓட்டு பெற்று தோல்வி
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று (மார்ச் 4) காலை, பூண்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு, மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்ரமணியம் மனு அளிக்க, திடீர் திருப்பமாக, யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் குமாரும் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், 15 ஓட்டுகள் பெற்று, திமுகவின் குமார் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்ரமணியம், 12 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார். குமாருக்கு ஆதரவாக தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பது தெரிய வந்தது; சுப்ரமணியத்துக்கு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் வாக்களித்துள்ளனர்.
இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். நகராட்சி அலுவலகம் அருகே, திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேசமாக கோஷமெழுப்பினர். திமுக கூட்டணி கட்சிகளே ஒருவரையொருவர் பரஸ்பரம் தாக்கிப் பேசிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த களேபரங்களுக்கு மத்தியில், நேற்று (மார்ச் 4) பிற்பகல், பூண்டி நகராட்சித் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதனை, அ.தி.மு.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். மாறாக, தி.மு.க, கவுன்சிலர்களின் ஆதரவுடன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜேஸ்வரி, துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதும், துணைத்தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு அதிர்ச்சியை தந்தது. தேர்தல் முடிவுகள், திருப்பூர் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உண்டாக்கின.

இதையடுத்து, தேர்தலில் என்ன நடந்தது என்பதை அறிய, “குற்றம் குற்றமே” நிருபர் குழு களமிறங்கியது. இதில், பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. நம்மிடம் பேசிய இரு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவியை, 3 இடங்களை மட்டுமே பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதை, 5 இடங்களில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருப்பூர் மாநகராட்சியில் துணை மேயர் பதவி கிடைத்த நிலையில், பூண்டியில் தலைவர் பதவியை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அது நடக்காததால், சில சூழ்ச்சி வலைகளை பின்னினர்.
சுப்பராயனின் சூப்பர் சூழ்ச்சி!
இந்த சூழ்ச்சிக்கெல்லாம் மூல கர்த்தாவாக, சுப்பராயன் எம்.பி. செயல்பட்டார். அவரது யோசனைப்படியே, தலைவர் தேர்தலில் திமுகவின் குமாருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வாக்களித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியை வரவிடாமல் செய்வதோடு, துணைத் தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிட் கட்சியே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த ரகசிய மாஸ்டர் பிளானை செயல்படுத்தினர்.

இதில், ஏதுமறியாத மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பலியாகி உள்ளார். ஆனால், இங்குள்ள அரசியல் உள்குத்து வேலைகளை தெரிந்து கொள்ளாமல், சென்னையில் உள்ள திமுக தலைமை, கூட்டணி தர்மம் என்றெல்லாம் பேசி, வெற்றி பெற்ற திமுக தலைவரை பதவி விலகச் சொல்கிறது.
உண்மையில், கட்சித் தலைமை அமைத்த கூட்டணியை, பூண்டியில் உடைத்தது, சுப்பராயன் தான். கூட்டணி தர்மத்தை மீறிய சுப்பராயனும், அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிட் கட்சியினரும், துணைத்தலைவர் பதவிக்காக, மார்க்சிஸ்ட் தோழர்களுக்கே துரோகம் புரிந்துள்ளனர். இதன் பலனை அனுபவிப்பது, மார்க்சிஸ்ட் கட்சியினரும், வெற்றி பெற்ற, திமுகவை சேர்ந்த குமாரும் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சதியால், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருர் கடும் மன உளைச்சலில் உள்ளார். இதை, திமுக மேலிடம் உணர வேண்டும்” என்று, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
மொத்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்காக, திமுகவை தூண்டிவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சியை சீண்டிவிட்டு, அதில் முதல் ரவுண்டில் ‘சூழ்ச்சி’ சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆனால் அடுத்த ரவுண்டில் எதுவும் நடக்கலாம் என்று, திமுகவினரும், கம்யூனிஸ்ட் தோழர்களும் நம்மிடம் தெரிவித்தனர். பூண்டியில் நிலவும் அரசியல் குழப்பங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பதவி சுகத்துகாக துரோகம்!
சுப்ரமணியன் சுளீர் பேட்டி…
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்ரமணியம் “குற்றம் குற்றமே” நிருபரிடம் கூறுகையில், “இந்த தேர்தல் மூலம், யார் யார் எப்படி இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலைமை ஒன்று அறிவித்தால், இங்குள்ளவர்கள் வேறொன்றை செய்கிறார்கள். பதவி சுகத்துக்காக, கட்சித் தலைமையின் உத்தரவை மதிக்காதது வேதனை அளிக்கிறது. இதை எங்கள் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

சிந்திக்குமா திமுக தலைமை?
பூண்டி நகராட்சித் தலைவர் தேர்தலில் அடுத்தடுத்து திருப்பங்களும், குழப்பங்களும் நிலவும் சூழலில், பூண்டி நகர திமுகவினர், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இங்குள்ள அரசியல் சூழலை துளியும் ஆராய்ந்து பார்க்காமல், சென்னையில் இருந்து முடிவை திணிக்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் உள்குத்து வேலையில் இருந்து தப்பிக்கவே, கடைசி நேரத்தில், நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் குமார் களமிறங்கி, அவர்களின் சதியை முறியடித்ததாக , திமுகவினர் கூறுகின்றனர்.
ஆனால், இதை கட்சித் தலைமை புரிந்து கொள்ளாமல், பதவியை ராஜினாமா செய்யச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கும் பூண்டி திமுகவினர், ஒரு கட்டத்தில் கட்சி முக்கியமா அல்லது மக்கள் அளித்த தலைவர் பதவி முக்கியமா என்று கேட்டால், மக்கள் தீர்ப்பே முக்கியம் என்று கூறி, திமுகவை உதறித் தள்ளவும், தலைவராக தேர்வாகி இருக்கும் குமார் தயாராக உள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.





