--- --:--:-- --

சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

3

மிழ்நாட்டில் நாளை ஆயுத பூஜையும், நாளை மறுதினம் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் வார விடுமுறையும் வருவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று 885 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்று 185 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த போக்குவரத்துறை துறை அமைச்சர் சிவசங்கர், சிறப்பு பேருந்துகளின் ஏற்பாடுகளை உறுதி செய்தார். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு புதிய பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர், கிழக்கு கடற்காலை சாலை, GWT சாலை வழியாக செல்லும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் செங்கல்பட்டு மற்றும் சென்னையின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மேலவளம்பேட்டை மற்றும் திருக்கழுக்குன்றம் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக திண்டிவனம் செல்லவும், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் GWT சாலை வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 3 மணி வரை அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறையையொட்டி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ரயில் விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது. இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு பகுதிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்றிரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் அக்டோபர் 5ஆம் தேதி இயக்கப்படுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் புறப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவு இல்லாத மெமு விரைவு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்றிரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon