அதிமுக கட்சியில் இருந்து விலகலா? – செங்கோட்டையன்
மனம் திறந்து பேசப்போகிறேன் என்று புயலை கிளப்பி உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகள் சினிமா பாடல் ஒன்றை பாடி பதில் அளித்து அங்கிருந்து விடைப்பெற்றார். அத்திகடவு அவினாசி திட்டத்தை தொடங்கியதற்காக கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததன் மூலம், முதல்முறையாக முரண்பாடு வெளிப்பட்டது.
அந்த விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததால் அதிருப்தியடைந்ததாக அப்போது செங்கோட்டையன் கூறியிருந்தார்.
அதன் பிறகு, கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறுவதையே செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாத செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதையும் தவிர்த்தார்.
அதன்பிறகு திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்குப் பின்னரே அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மட்டுமே செங்கோட்டையன் பங்கேற்றார். கூட்டணி அமைந்த பிறகு அமைதி காத்து வந்த செங்கோட்டையன், தற்போது வரும் வெள்ளிக்கிழமை மனம் திறந்து பேசவுள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ பண்ணாரி உட்பட நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் ஈரோடு மேற்கு மாவட்டத்தில் உள்ள 95 சதவீத நிர்வாகிகள் பங்கேற்றனர்.
18 ஒன்றிய செயலாளர்களில் 16 பேரும், 14 பேரூராட்சி செயலாளர்களில் 13 பேரும், 3 நகரச் செயலாளர்களில் இருவரும் பங்கேற்றனர். பூட்டிய அறையில் நடைபெற்ற ஆலோசனையில், தனது நிலைப்பாடு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவது குறித்தும் வரும் 5-ஆம் தேதி பேசுவதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஈரோடு சுண்ணாம்பு ஓடையில் உடல்நலம் குன்றியுள்ள அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கருப்பண்ணசாமி உடல்நலம் குறித்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் , ஐந்தாம் தேதி எதைப்பற்றி தான் பேசுவேன் என்பது அன்று தான் தெரியும் என்றார்.
மேலும் செங்கோட்டையனிடம் செய்திளார்கள் மேற்கொண்டு பல கேள்விகள் எழுப்பிய போது “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை”என்று பாடல் வரிகளை பாடி பதிலளித்தார்.






