சஸ்பென்ஸ் வைத்து பேசிய செங்கோட்டையன்!
டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைப்பதில் மூத்த தலைவர்களின் நிலைப்பாடு சஸ்பென்ஸ் என தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கோபியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “எனது மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை பார்க்கவே நான் நேற்று சென்னைக்குச் சென்றிருந்தேன். என்னுடைய சொந்த வேலையைப் பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பியிருக்கிறேன்” என்று கூறினார். தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்றும், அவ்வாறு வந்த செய்திகள் தவறானவை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
செங்கோட்டையன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். “என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற, கட்சி மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
ஒருக்கிணைப்பு பணி எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு, “பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை இப்போது கூற இயலாது” என்று பதிலளித்தார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர்கள் பலர் தன்னிடம் ஒருங்கிணைப்பு குறித்துப் பேசியதாகவும், ஆனால், அது யார் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது என்றும் கூறினார்.
அனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறது என்பது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒருங்கிணைப்புப் பணிகள் தேர்தலுக்கு முன் நிறைவடையுமா என்ற கேள்விக்கு, “நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்… நல்லதே நடக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மீண்டும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் ஊடகங்களுக்குத் தெரிவிப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.





