--- --:--:-- --

சீமான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – பபாசி கண்டனம்

1

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் சிக்கியுள்ள சீமான், பொது மேடையில் அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பபாசி தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தக காட்சி விழாவில் சீமான் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பட்டு, அதற்கு பதிலாக புதுச்சேரி அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.

 

டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய சீமான், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சித்ததும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதுதொடர்பாக நியூஸ்18க்கு பேட்டி அளித்த பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், அரசியல் பேச வேண்டாம் என கூறியும் சீமான் பேசியதாக தெரிவித்தார். “இது இலக்கிய மேடை. அனைத்து கட்சி சார்பிலும் இங்கு கலந்துகொள்வார்கள் என்பதால் அரசியல் பேச வேண்டாம் என சீமானிடம் தெரிவித்தேன்” என்று சேது சொக்கலிங்கம் கூறினார்.

 

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டிஸ்கவரி புக் பேலஸிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பன், அது புதுச்சேரி அரசின் வாழ்த்து என்றோ அதன் மூலம் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்படுகிறது என்கிற அரசியல் தெளிவோ இல்லாதது தன் அறியாமைதான் என கூறியுள்ளார்.

 

இந்நிலையில், பெரியாரை இழிவுப்படுத்தியதாக சீமானை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பணமும் பதவியும் கிடைத்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கூட சீமான் காட்டிக் கொடுத்திருப்பார் என விமர்சித்தார்.

 

மேலும் சீமான் தானாக இயங்கவில்லை, அவர் இயக்கப்படுகிறார். இது உண்மை என்றும் சுப.வீரபாண்டியன் அக்கூட்டத்தில் தெரிவித்தார். அதேபோல், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தன்னுடைய வாக்கு சதவிகிதம் குறைவதை சீமானால் புரிந்து கொள்ள முடிவதாகவும் சுப. வீரபாண்டியன் தெரிவித்தார். சீமான் திருந்த வேண்டும் அல்லது திருத்துவோம் என்றும் சுப.வீரபாண்டியன் காட்டமாக பேசினார்.

 

இதற்கிடையே, சென்னை புத்தகக் காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில், கண்ணியம் காக்க தவறியதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பபாசி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பபாசி நிர்வாகிகள், அறிவு சார் உலகமான புத்தகக் காட்சிக்கு வந்து சீமான் உளறிவிட்டுச் சென்றதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

Right Menu Icon