பள்ளி மாணவன் தற்கொலை..! ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
சென்னை அம்பத்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை அம்பத்தூரை சேர்ந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு படித்து முடித்தான்.
இந்நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி கலந்தாய்வுக்காக மாநிலக் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாணவனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் தான் பயின்ற பள்ளியில் ஷர்மிளா என்ற ஆசிரியையை மாணவன் காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மாணவரிடமிருந்து தொடர்பை ஷர்மிளா முடித்துக்கொண்டார்.
இதனால் விரக்தி அடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






