“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது”!! மாஜிஸ்ட்ரேட்டை மிரட்டிய சாத்தான்குளம் காக்கி சட்டைக்காரன்.. சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்ற கிளை… போலீஸ் உயர் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்!!
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, “உன்னால ஒண்ணும் பிடுங்க முடியாது” என காக்கிச்சட்டை போட்ட சாதாரண போலீஸ்காரன் ஒருவன் ஒருமையில் நீதிபதியையே அவதூறாக பேசி மிரட்டல் விட்ட சம்பவத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை சாட்டையை சுழற்றியுள்ளது.
இந்த விவகாரத்தில் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்த நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உயர் பொறுப்பில் உள்ள டிஐஜி முதல் எஸ்.பி., ஏ. எஸ்.பி., டிஎஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட காக்கிச்சட்டை போட்ட போலீஸ்காரனையும் உடனடியாக ஆஜராக வைத்தது காவல்துறை அதிகாரிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை – மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோப அலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆரம்பத்தில் மெத்தனம் காட்டியது தமிழக அரசு . பிரச்னையை பூசி மெழுகப் பார்த்தது தமிழக அரசும் காவல்துறையும். முதல்வர் எடப்பாடியும், தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரும் கூட, உடல் நலக் கோளாறால தந்தை, மகன் இருவரும் இறந்ததாகக் கூறி காவல்துறையை தாங்கிப் பிடிக்கப் பார்த்தனர்.
இதில்அமைச்சர் கடம்பூர் ராஜு சொன்ன, இருவரின் மரணம் லாக்-அப் மரணம் கிடையாது; சிறையில் ஏற்பட்ட மரணம் என்ற புது விளக்கம் கேலிக்கூத்தாகி விட்டது.
இதனால் தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறைக்கு எதிராக பெரும் போராட்டங்களும், கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன் தமிழக அரசு ஜெர்க் ஆகி தடாலடியாக பின் வாங்கி விட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடாலென சரணாகதியாகி விட்டார்.
இந்நிலையில், சாத்தான்குளம் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை அடுத்தடுத்து பிறப்பித்து வரும் உத்தரவுகள் குற்றம் இழைத்த காக்கிச்சட்டைகளையும் , அவர்களை காப்பாற்ற முயலும் உயர் காவல் அதிகாரிகளையும் குலை நடுங்கச் செய்துள்ளது. ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றமே இறங்கி, அதிரடி உத்தரவுகளைபிறப்பித்து சாட்டையை சுழற்றுகிறது.
அதன்படி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நேரடி விசாரணை நடத்த உத்தரவு பறந்தது. ஆனால் விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட்டுக்கு, போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணைக்கு இடையூறுகள் விளைவிக்க காக்கிச்சட்டைகள் களமிறக்கப்பட்டனர்.
“ஒரு போலீஸ்காரனுக்கு இவ்வளவு திமிரா”!

மேலும் தடயங்களையும் மறைக்கும் வகையில் மாவட்ட போலீஸ் அதிகாரிகளே பிற காக்கிகளை ஏவி விட்டதும் அப்பட்டமாக தெரிந்தது. இப்படித்தான் மாஜிஸ்ட்ரேட் விசாரனைக்கு இடையூறு ஏற்படுத்த, சாத்தான்குளம் சம்பவத்திற்கு தொடர்பே இல்லாத தூத்துக்குடி மாவட்ட காவல் ஏ.எஸ்.பி.குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் குறுக்கீடு செய்ததுடன், அவர்களுடன் வந்த மகாராஜன் என்ற சாதாரண போலீஸ்காரன், “உன்னால ஒண்ணும் பிடுங்க முடியாது” என மாஜிஸ்ட்ரேட் கண்ணதாசனிடம் எகிறியது போலீசின் மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையும் தவிடுபொடியாகி விட்டது.
நீதிமன்றங்கள் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் மிரட்டல் தொனியில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை அதுவும் காவல்துறையில் கடைநிலை காவலராக உள்ள மகாராஜன் போன்ற காக்கிகள் உதித்தது இப்போது ஒட்டுமொத்த துரத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கே பெரும் சிக்கலை உண்டாக்கி விட்டது.

தமது விசாரனைக்கு காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாதது மற்றும் இடையூறுகள், மிரட்டல் தொனியில் போலீஸ்காரர் மகாராஜன் ஏகவசனத்தில் பேசியதை மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் குறிப்பிட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மெயில் தட்டி விட விவகாரம் உஷ்ணமாகி விட்டது.
உடனடியாக மதுரை கிளை நீதிபதிகள் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு லழக்காக எடுத்து சாட்டையை சுழற்றி விட்டனர். இந்த செயலுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நெல்லை சரக டி.ஐ.ஜி., அபிநபு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், மாஜிஸ்ட்ரேட்டிடம் ஒண்ணும் பிடுங்க முடியாது என வீராப்பு பேசிய போலீஸ் மகாராஜன் ஆகியோர் இன்று காலை உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
அத்துடன் மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் இடையூறு செய்த ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ் மகாராஜன் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தனர்.

இதனால் வேறு வழியின்றி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கும், மாஜிஸ்ட்ரேட்டிடம் வீராப்பாக ஒன்றும் புடுங்க முடியாது என்ற போலீஸ் மகாராஜன் சஸ்பென்ட்டும் செய்யப்பட்ட நிலையில், இன்று டிஐஜி முதல் மாவட்ட எஸ்.பி.,ஏஎஸ்பி, டிஎஸ்பி என அனைவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கூடவே தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞரும் ஆஜரானார்.
அப்போது நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் மகாராஜன் ஏதோ மன அழுத்தத்தில் அவ்வாறு பேசியதாக கூறினாலும் நீதிபதிகள் விடுவதாக இல்லை. நீதித்துறை நடுவரை மிரட்டிய விவகாரத்தில் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், வேண்டுமானால் தனித்தனியாக வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளுங்கள் என ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ் மகாராஜன் ஆகியோரிடம் கண்டிப்பு காட்டினர்.
இதனால்ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிர் பறித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மற்றும் காப்பாற்ற முயலும் தூத்துக்குடி காக்கிச்சட்டைகளின் மானம், மரியாதை இன்னும் என்ன மாதிரியெல்லாம் நார் நாராய் கிழிபடப் போகிறதோ தெரியவில்லை.






