மகளிருக்கு மாதம் ரூ.1,000.. இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு..!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகளும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியிருந்தும் உதவித் தொகை கிடைக்காத அனைத்து குடும்பப் பெண்களுக்கும் வழங்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு அறிவிப்பு மீதி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ” கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மிகவும் வெளிப்படைத் தன்மையுடன், எந்த அழுத்தமோ, குறுக்கீடோ இல்லாமல், முழுக்க முழுக்க தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதுமிருந்து இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளதாகவும், அம்மனுக்களை, சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஆய்வு செய்து, நவம்பர் 30-ஆம் தேதிக்குள் உரிய தீர்வினை அளிப்பார்கள் என்றும் உறுதி அளித்தார். இந்த மேல்முறையீட்டு பணிகளை மேற்கொள்ள வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு 12.10.2023 – வருகிற வியாழக்கிழமை அன்று சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே, விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின்படி அரசு மிக கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறி விளக்கம் அளித்தார்.





