காலில் காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் ரிஷப் பந்த் மைதானத்தில் ஆட வந்த போது ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டனர். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 264 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. சாய் சுதர்சன் 61 ரன்கள் மற்றும் யாஷ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்து இருந்தனர். இந்த டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பந்த்த ரிவர்ஸ் ஷாட் முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
மைதானத்தை விட்டு நடந்து செல்ல முடியாமல் அவர் 4 சக்கர வாகனம் மூலமாக பெவிலியன் திரும்பினார். காயம் காரணமாக ரிஷப் பந்த் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 314 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து இருந்தது. வாஷிங்டன் சுந்தர் களத்தில் இருந்த போது அடுத்த வீரராக யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரிஷப் பந்த் களமிறங்கினார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தாங்கி, தாங்கி மைதானத்தில் நடந்து வந்தார். காயமாக இருந்தாலும் ரிஷப் பந்த் மைதானத்தில் களமிறங்கிய போது அங்கிருந்த ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டு அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.






