காவு வாங்க காத்திருக்கும் ரேஷன் கடை..ஹெல்மெட் அணிந்தால் உயிர் தப்பலாம்..வைரலாகும் திருப்பூரின் பரிதாப நிலை!
திருப்பூரில், ரேஷன் கடை ஒன்றுக்கு ஹெல்மெட் அணிந்து செல்லும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், அதிகாரிகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
வழக்கமாக பரபரப்பாக இயங்கும் ரேஷன் கடைகள், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காரணம் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்படுவதால், மக்கள் அரசின் பரிசை விரும்பி வாங்கிச் செல்ல அதிகளவில் கூடுவார்கள்.
இந்த நிலையில், திருப்பூரில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசை வாங்க குவிந்த மக்களில் ஒருசிலர் ஹெல்மெட் அணிந்து வரிசையில் நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. திருப்பூர், மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தோட்டம், பெரிய கடை வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு தான், இத்தகைய மோசமான பாப்புலாரிட்டி கிடைத்திருக்கிறது.
இதன் பின்னணியில் என்ன காரணம் என்று விசாரித்தோம்… இந்த ரேஷன் கடையின் மேற்கூரை கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, கடைக்கு வரும் போது தலையில் பெயர்ந்து விழுந்தால் என்னவாவது என்று பாதுகாப்பு கருதி அப்பகுதி மக்கள் சிலர், தலைக்கவசத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம். பல மாதங்களாக ரேஷன் கடையின் நிலை பரிதாபகரமாக உள்ளது. பொருட்களை வாங்கிச் செல்லும்போது, தலையில் விழுந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது.
எங்கள் நிலையாவது பரவாயில்லை. ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பித்து தரும்படி கூட்டுறவு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினோம். எனினும், அதிகாரிகள் வழக்கம் போல் எதையும் கண்டுகொள்ளவில்லை. எங்களைவிட ரேஷன் கடையில் பணி புரியும் ஊழியர்களின் நிலை இன்னும் மோசமாகும். விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நேரிட்டால் தான் அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை.
உடனே, ரேஷன் கடையை பழுது பார்க்க வேண்டும். இங்குள்ள வார்டு கவுன்சிலர், மேயர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இந்த அவலத்தை பார்த்து, உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று “குற்றம் குற்றமே” இதழ் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தி வெளியான பின்னர் மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக கூறும் தமிழக முதல்வர் கூறி வந்தாலும், செயல்படாத சில அதிகாரிகளால் அரசுக்கு அவப்பெயர் உண்டாகும். தலைக்கவசம் அணிந்து வந்து ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்கும் அவல நிலைக்கு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.





