மோடி படத்தை வையுங்க சார்! ‘தீ’யாக வேலை செய்த பாஜகவினர்…‘சூடு’பறந்த போகலூர் யூனியன் ஆபீஸ்!!
போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறி, பாஜகவினர் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டது, இராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கர், அண்ணா உள்ளிட்டதலைவர்களுடன்தற்போதைய முதலமைச்சரின் உருவப்படங்கள் இடம் பெற்றிருப்பதை பார்க்கலாம். இதில் குறிப்பாக, முக்கிய அதிகாரிகளின் அறையில் தற்போதைய முதலமைச்சரின் படமே இடம் பெற்றிருக்கும்.
தமிழக அரசு அலுவலகங்களில் யார் யாரின் படங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது தொடர்பான அரசாணையே உள்ளது. அதன்படி, 1978ம் ஆண்டில் வெளியான தமிழக அரசின் அரசாணை (எண்: 47 – 07.01.1978) உத்தரவின்படி, பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர், பதவியில் இருக்கும் பிரதமர், தேசப்பிதா மகாத்மா காந்தி, முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், சி.ராஜகோபாலாச்சாரியார், தந்தை பெரியார் ஆகிய ஒன்பது தலைவர்களின் படங்கள் இடம் பெறலாம் என்று விதி உள்ளது.
இதற்கிடையே, கடந்த மாதம் 13ம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பின்னணியில், இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜகவினர் நேற்று நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர், அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவரான, முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும், தற்போதைய கவுன்சிலருமான கதிரவன் தான். இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். தலைவராக வேண்டுமென்று முட்டி மோதிப்பார்த்து, அதற்கான வாய்ப்பு கிடைக்காத சூழலில். பாஜக வீசிய வலையில் சிக்கி, அக்கட்சியில் இணைந்தார்.
‘தீ’யாக வேலை செய்த பாஜகவினர்…

அதன்பிறகு அவரது செயல்பாடுகள் ஜெட் வேகத்தில் இருந்தன ; ‘பழம் தின்று கொட்டை போட்ட’ பாஜகவினரே தோற்றுப் போகும் அளவுக்கு, கட்சிக்காக கதிரவன் ‘தீயாக’ வேலை செய்யத் தொடங்கினார். அதன் ஒருபகுதிதான் தற்போது, யூனியன் ஆபீஸில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
அண்மையில், போகலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலை சந்தித்து, பிரதமர் மோடியின் படத்தை யூனியன் ஆபீஸில் வைக்க வேண்டுமென்று பாஜகவினர் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, இதுவரை அதுபோன்ற நடைமுறை இருப்பதாக தெரியவில்லை. அப்படி படம் வைக்க வேண்டுமென்றால், அதுபற்றி கேட்டு சொல்வதாகக்கூறி நழுவிவிட்டார். இதனால் ஆவேசமடைந்த கதிரவனும், பாஜக பிரமுகர்களும், பிரதமரின் படத்தை அலுவலக்த்தில் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
அதன்படி நேற்று, சத்திரக்குடியில் இருந்து போகலூர் யூனியன் ஆபிஸை நோக்கி கதிரவன் தலைமையில் பாஜகவினர் பேரணியாகச் சென்றனர்; கட்சிக் கொடியுடன் வாகனத்தில் பாஜகவினர் பேரணி சென்றது, அப்பகுதியை குலுங்கச் செய்தது. அதன் முடிவில் யூனியன் ஆபீஸ் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பிரதமர் மோடியின் படத்துடன் யூனியன் ஆபீஸிற்குள் பாஜகவினர் செல்ல முற்பட்டனர்.
யூனியன் ஆபீஸ் வளாகத்தில் பரபரப்பு
அப்போது அங்கு வந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி என்பவர், பாஜகவினரை சமாதானப்படுத்த முற்பட்டார். பிரதமரின் படத்தை வைப்பது தொடர்பாக எந்த தகவலுக்கும் தங்களுக்கு வரவில்லை; வைக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி மேலதிகாரிகளிடம் கேட்டு முடிவெடுப்பதாக கூறினார்.
அவரது இந்த பதில், பாஜகவினருக்கு ஏமாற்றத்தையும் ஆவேசத்தையும் அளித்தது. அவரை சுற்றி நின்றிருந்த பாஜகவினரில் சிலர், பிரதமரின் படம் வைக்கலாம் என்று அரசு உத்தரவே உள்ளது. அதிகாரியான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பிரதமரின் படம் வைக்கக்கூடாது என்றால், எந்த அடிப்படையில் முதலமைச்சரின் படத்தை அலுவலகத்தில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போகலூர் யூனியன் ஆபீஸ் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் தலையிட்டு, பாஜகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் போகலூரில் மட்டுமின்றி இராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.








