அரசு போக்குவரத்துக் கழகங்களில் தனியார் பேருந்துகள்..!
பழைய பேருந்துகளுக்குப் பதிலாகப் புதிய பேருந்துகளை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பேருந்து பற்றாக்குறையைப் போக்க, மாநகர போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் இனி தனியார் பேருந்துகளை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுவரை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிகமாக தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது முதல்முறையாக சென்னை மாநகர பேருந்துகள் (MTC) உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் தனியார் பேருந்துகளை நிரந்தர அடிப்படையில் வாடகைக்கு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டாலும், பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் மாறாது. அரசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணமே இதற்கும் பொருந்தும்.
இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு தனது சொந்த பேருந்துகளை இயக்குவதை விட, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது அதிக செலவு பிடிக்கும் என்று கூறப்படுகிறது. தனியார் பேருந்துக்கு அரசு தரும் தொகை 1 கி.மீட்டருக்கு ரூ.51 ஆகவும் அரசு குளிர்சாதன பேருந்துகளின் செலவு 1 கி.மீட்டருக்கு ரூ.40 – ரூ.45 எனவும் உள்ளது. அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளுக்கு அதிக பணம் வழங்கப்படுவது நிதி இழப்பை ஏற்படுத்தும் என ஓய்வுபெற்ற அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த தீபாவளியின் போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் நிரம்பிய பிறகே, அதிகாலை நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபோது 11,900 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 2025 வரை சுமார் 3,500 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. 2025-26 இலக்கு 3,000 பேருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டு, ரூ.1,031 கோடி ஒதுக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் வரை இலக்கில் கால் பங்கு கூட எட்டப்படவில்லை. தேர்தல் நெருங்குவதால், குறைந்தபட்சம் 1,800 பேருந்துகளையாவது விரைவாகக் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். பழைய அரசு பேருந்துகளில் இருக்கை வசதி குறைபாடு, ஜன்னல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதால், பல பயணிகள் தனியார் பேருந்துகளையே விரும்புவதாக போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அரசு தொடர்ந்து தனியார் பேருந்துகளைச் சார்ந்து இருந்தால், எதிர்காலத்தில் அரசுப் போக்குவரத்து சேவை பலவீனமடையும் என்ற அச்சமும் நிலவுகிறது.





