சுதந்திர தின விழாவில் பிரதமர் பேச்சு..!
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பட்டொளி வீச தேசியக்கொடி பறந்தபோது விமானப் படையின் இரு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, 40 கோடி மக்களால் அடிமைத்தனத்தை உடைத்து சுதந்திரம் பெற முடியும் என்றால், 140 கோடி மக்களின் உறுதியால் என்ன சாதிக்க முடியும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
நாட்டின் பாதுகாப்புப் படைகள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொண்டதாக அவர் கூறினார்.
மக்கள் தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், நாட்டிற்கு மூன்று மடங்கு வேகத்தில் உழைக்கப்போவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.






